``இங்க தான் பெண்கள அடைச்சிருக்காங்க.. பார் திறந்திருக்கு..Live-ல போடுங்க'' - பழனியில் பரபரப்பு
மதுரையில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியின் சார்பில் துவங்கவுள்ள நீதி கேட்டுப் பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டதாக கூறி பாஜகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் மண்டபத்தின் அருகில் தனியார் மதுபான பார் திறக்கபட்டதை பாஜகவினர் காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பாஜக மாநிலத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்திலும் ஈடுபட்டார். தொடர்ந்து பாஜக மகளிரணி சார்பில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு மதுரையில் இருந்து இன்று நீதிப் பேரணியாக துவங்கி சென்னை சென்று ஆளுநரிடம் மனு அளிக்கபப்டும் என்றும் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து பாஜக மகளிரணி யினர் நடத்தும் நீதிப்பேரணியில் பங்கெடுக்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் மதுரைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறப்படும் இடத்திலேயே அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் பழனியில் இருந்து பாஜக மகளிரணியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரைக்கு வேனில் புறப்பட்டபோது தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது பதிவு செய்யப்பட்ட பெண்கள் அனைவரையும் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்..
இதுகுறித்து பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது 15 பெண்களை கைது செய்து அடைத்து வைத்திருக்கும் மண்டபத்திற்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என்றும் அதன் மண்டபத்தின் அருகிலேயே தனியார் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருவதை செய்தியாளர் சந்திப்பிலேயே செய்தியாளர்களை அழைத்துக்கொண்டு மதுபான பாரின் உள்ளே பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் அழைத்துச் சென்று காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.