இதுவரை கேள்விப்படா விசித்திரம்... முகம் சிதைத்து ஊரை அலறவிட்ட எமன் எங்கே? பீதியில் வேலூர் மக்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, சிறுத்தை தாக்கி பட்டதாரி இளம்பெண் பலியான நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
வேலூர் மாவட்டத்தில் இதுவரை கேள்விபட்டிடாத வகையில் அரங்கேறியது ஓர் சம்பவம்...
குடியாத்தம் அருகே கே வி குப்பத்தை அடுத்த துருவம் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில், ஆட்கொல்லி சிறுத்தை ஒன்று தாக்கியதில் அஞ்சலி என்ற பட்டதாரி இளம்பெண் உயிரிழந்தது வேலூர் மாவட்டத்தையே கதிகலங்க செய்தது...
இதுவரை வேலூர் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதாக எவ்வித சம்பவம் அரங்கேறாத நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது...
இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்க, சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டியது வனத்துறை..
சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, வனப்பகுதியில் ஆங்காங்கே டிராப் கேமராக்களை பொருத்தியும், ட்ரோன் கேமராவை பயன்படுத்தியும் கண்காணித்தார்.
ட்ரோன் மற்றும் டிராப் கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகாத நிலையில், அடுத்தடுத்து சிறுத்தை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.
இளம்பெண் அஞ்சலி உயிரிழப்புக்கு பின், குடியாத்தம் அருகே வீரிசெட்டிபள்ளி, அனுப்பு, காந்தி கணவாய் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தை தாக்கியதில் ஆடு, கோழி, கன்று குட்டி உள்ளிட்டவை உயிரிழந்தன. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியிலேயே நாட்களை நகர்த்தி வந்தனர்.
மேலும் கடந்த சில நாட்களாக அதிக அளவில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பல்வேறு கிராமங்களில் கிராம மக்கள் அச்சமடைந்து பேசப்பட்டு வரும் நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், தெருக்கூத்து உள்ளிட்டவற்றை நடத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
வனப்பகுதியில் டிராப் கேமராக்களை அதிகளவில் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வரும் சூழலில், அடுத்தக்கட்டத்திற்கு இந்த கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி...
ஆட்சியர் உத்தரவின் பேரில், வனத்துறையினர் மற்றும் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து அதி தொழில்நுட்பமான ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது..
கண்காணிப்பு மட்டுமன்றி வனவிலங்குகளை பதிவு செய்தவுடன், ஒலிப்பெருக்கி மூலம் ஒலி எழுப்பப்பட்டு, வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்டும் பணியினையும் இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து டிராப் கேமராவில் எந்த இடத்தில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதோ, அந்த இடத்தை கண்டறிந்து கூண்டு வைத்து பிடிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால் இதுவரை டிராப்கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் வைக்கப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தை தென்படுமா என காத்திருக்கின்றனர் வனத்துறையினர்.
மேலும் அச்சுறுத்திவரும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்...