பிறப்பு சான்றிதழ்களில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் டிசம்பர் கடைசிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
பொது சுகாதாரத்துறை இயக்குனரும், பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் சுற்றறிக்கை மூலம் இது குறித்து தெரிவித்துள்ளார். மாவட்ட வருவாய் மற்றும் சுகாதார இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பெயர் விடுபட்டிருந்தால் மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளரின் கையொப்பமிட்ட படிவம் பெற்று பெயர்கள் சேர்க்கலாம் எனவும், பிறப்பு சான்றிதழ் குறித்து எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த ஆண்டுக்குள் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது...