விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மது விற்றதாக காவல் துறை வழக்குப் பதிந்ததால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தில், சூப் விற்பனை செய்து வந்த மாற்றுத் திறனாளி செல்வகுமார், இதற்கு முன்பு கள்ளத்தனமாக மதுபானம் விற்று வந்தார். ஊர் முக்கியஸ்தர்கள் எச்சரித்ததால் மதுபான விற்பனையை அவர் நிறுத்தி விட்ட நிலையில், அவருடைய இருசக்கர வாகனத்தில் இருந்து கடந்த 22ம் தேதி, 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மதுபானங்களை, தனது கடையில் வேலை செய்பவர்களுக்கு வாங்கிச் செல்வதாக செல்வகுமார் கூறியபோதிலும், இரு சக்கரவாகனத்தை கைப்பற்றிச் சென்றனர். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பின் இருசக்கர வாகனத்தை மீட்ட செல்வகுமாரிடம், காவல் நிலையத்தில் அபராதம் செலுத்துமாறு போலீசார் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த செல்வகுமார், கடிதம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். செல்வகுமாரின் உடலை மீட்க போலீசார் சென்றபோது, அவர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். செல்வகுமாரின் தற்கொலைக்கு காவலர்கள்தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.