கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீணா போச்சு... ஷோரூம் வாசலிலேயே வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண்
புதிதாக வாங்கிய வாஷிங் மெஷின் 5 மாதங்களில் 6 முறை பழுதானதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஷோரூம் எதிரில் வாஷிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்த லாவண்யா கணவனைப் பிரிந்து தனியாக வாழும் நிலையில், தான் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை வைத்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஷோரூமில் இருந்து புதிய வாஷிங் மெஷின் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். வாங்கிய வாஷிங் மெஷின் 5 மாதங்களில் அடுத்தடுத்து 6 முறை பழுதாகியுள்ளது... சம்பந்தப்பட்ட ஷோரூமில் கேட்டும் வாஷிங் மெஷினை மாற்றித் தராததால் ஆத்திரமடைந்த லாவண்யா ஷோரூம் வாசலில் வாஷிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார். ஷோரூமின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் லாவண்யாவை சமாதானம் செய்து, வாஷிங் மெஷினை மாற்றித் தரும்படி கூறிய நிலையில், ஷோரூம் தரப்பில் தங்களால் சர்வீஸ் மட்டுமே செய்ய முடியும் என கூறியுள்ளனர். போலீசார் கூறியும் மாற்றித் தர மறுத்ததால், அதை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளார் லாவண்யா... கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் வாஷிங் மெஷின் வாங்கிய நிலையில், பணம் வீணாய்ப் போனதாக பாதிக்கப்பட்ட பெண் புலம்பித் தவித்தார்...