16-வது நிதிக்கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழு, 4 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகின்றனர்.
குழுவில் நிதிக் கமிஷன் உறுப்பினர்கள் 12 பேர் சிறப்பு விமானத்தில் நாளை பிற்பகல் தமிழகம் வருகின்றனர். சென்னையை அடுத்த நங்கநல்லுார் செல்லும் அவர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர். இரவு 7.30 மணிக்கு ஐடிசி கிராண்ட் சோழா திரும்பும் குழுவினர் அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கண்டு களிப்பதுடன், முதல்வர் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்தை முடிக்கின்றனர். பின்னர்18ம் தேதி முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அப்போது, வரி பகிர்வின் அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று நிதிக்குழுவிடம் முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.இதையடுத்து,19ம் தேதி கடல்நீரை குடிநீராக்கும் நெமிலி பிளாண்ட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதுார் சென்று ஏற்றுமதி தொடர்புடைய யூனிட்களை பார்வையிடுகின்றனர். 20ம் தேதி தனுஷ்கோடி செல்லும் குழுவினர், ராமநாதபுரம் நராட்சி அலுவலகத்தை பார்வையிடுகின்றனர். தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை பார்வையிடுகின்றனர்.