#perungalathur #chennai
பெருங்களத்தூர் கோர கொலை.. வாயில்லா பூச்சியை கொல்ல எப்படி மனசு வந்தது? - மோட்டிவ் தெரியாமல் குழம்பிய போலீஸ்.. பின்னணியில் 10th மாணவி சம்பவம்..?
கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் அருகே சாலையோரத்தில் தான், இந்த சம்பவம் நடந்து உள்ளது. உடம்பு எல்லாம், ஒரே வெட்டு காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், எலக்ட்ரீசியனான சூர்யா என்ற இளைஞர் என தெரியவந்து உள்ளது.
முதலில் ஆலப்பாக்கம் மப்பேடு செல்லும் சாலை அருகே கூழாங்கற்கள் தரம் பிரிக்கும் குடோனை ஒட்டி உள்ள மண் சாலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, உயிரிழந்த இளைஞரின் உடலில் பச்சை குத்தி இருந்த அடையாளத்தின் அடிப்படையில், அவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க சூர்யா என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் பிறவியிலிருந்தே சரியாக வாய் பேச இயலாத நிலையில், காதும் கேட்காத முடியாத மாற்றுத்திறனாளி எனக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், இவர் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தனது அண்ணனுடன் தங்கி, கடந்த 13 ஆண்டுகளாக சேலையூர் பகுதியில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், சம்வத்தன்று இரவு 10.30 மணிக்கு பைக், செல்போன் உள்ளிட்டவைகளை வீட்டிலேயே வைத்து விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. பிறகு சுமார் 11.30 மணியளவில், மதுபானக்கடை ஒன்றின் அருகே தள்ளாடியபடி மதுபோதையில் ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து இருந்த சூர்யாவை, ரோந்து வந்த போலீசார் சிலர் வீட்டுக்கு போகும்படி அட்வைஸ் செய்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, மறுநாள் கொடூரமாக கழுத்தை அறுத்தை நிலையில், உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பு, பூ வியாபாரம் செய்யும் தனது தாயாருடன் சூர்யா, ஆதிநகர் பகுதியில் இருந்த போது, சரிவர வாய்ப்பேச முடியாத சூழலில் அந்த பகுதியில் உள்ளவர்களோடு அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல, தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் இவருக்கு காதல் மலர்ந்த நிலையில், மாணவியை சூர்யா, திருத்தணி பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு அழைத்து சென்ற விவகாரத்தில், போலீசாரின் உதவியுடன் மாணவியை அவரது பெற்றோர் மீட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது.
இந்த நிலையில், சூர்யாவை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சேலையூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.