``இந்த சின்ன செப்டிக் டேங்க் உள்ள ஒரு சின்ன குழந்தை எப்படிங்க விழும்'' - கொந்தளிக்கும் உறவினர்கள்
பள்ளிக்குச் சென்ற நான்கு வயதுக் குழந்தை பள்ளி வளாகத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
பள்ளிக்குச் சென்ற குழந்தை இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவாள் அவளுக்குப் பிடித்த உணவைச் சீக்கிரமாக சமைத்து விட வேண்டும் என்று பரபரப்புடன் இருந்த தாய்க்குப் பள்ளியிலிருந்து வந்த செய்தி அவரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார் பழனிவேல். மனைவி சிவசங்கரி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
தம்பதியின் மூத்த மகளான நான்கு வயது லியா லட்சுமி அருகில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறார்.மதியம் இரண்டு மணி அளவில் கழிப்பறைக்குச் சென்ற குழந்தை வகுப்பறைக்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த ஆசியர்கள் பள்ளி வளாகத்தினுள் தேடி இருக்கின்றனர்.
அப்போது அருகில் உள்ள செப்டிக் டேங் பகுதியில் தேடியுள்ளனர். செப்டிக் டேங்கின் மூடி திறந்து கிடந்ததால் அதனுள் எட்டிப் பார்த்த போது உள்ளே சிறுமியின் ஷூ கிடந்ததைத் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். தொடர்ந்து தேடிய போது சிறுமியின் உடல் அங்கே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் பள்ளியின் ஒட்டுநர் கோபால் இரும்பு கம்பியைக் கொண்டு சிறுமியின் சடலத்தை வெளியே எடுத்து இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று இருக்கின்றனர். ஆனால் லியா லட்சுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த தகவல் குழந்தையின் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது உறவினர் பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவனக்குறைவாகச் செயல்பட்டதாக கூறி பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த உறவினர்கள் சிறுமி உயிரிழந்த செப்டிக் டேங் பகுதிக்குச் சென்றனர். செப்டிக் டேங்கில் சிறுமி விழுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர்.
பள்ளிக்கு ஆசையாகச் சென்ற மகளை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.