தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருத்தணியில் புராதன திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். துரியோதனன் மற்றும் பீமன் வேடமிட்ட தெருக்கூத்து கலைஞர்கள் படுகளம் நிகழ்வை தத்துரூபமாக நடித்து அரங்கேற்றினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி பச்சையம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மங்கள வாராஹி அம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட கம்பம் கரூர் மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்தை தரிசித்தனர்.
நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பம்பை மேளம் முழங்க, கூம்பு இசை ஒலிக்க அம்மன் தேர் ஆடி அசைந்து வந்த காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. பின்னர் வழி நெடுகிலும் காத்திருந்த பக்தர்கள், சாமிக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.