அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது என குறிப்பிட்டுள்ளார். மகளிருக்காக திராவிட இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், ஆட்சிக்காலத்தில் திமுக செயல்படுத்திய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். கடந்த 21-ஆம் தேதி, தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கோட்பாடுகளை இலக்காக வைத்து செயல்பட அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பெண்கள் அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாக பெறும் வரை, அதை நோக்கிய பயணம் தொடரும் என்று உறுதி அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பெண்கள் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.