``ஹெல்மெட் போடாம ஏன் போன..?'' ஓடாத காருக்கு ரூ.3000 அபராதம் - ``எதே..'' அதிர்ச்சியில் ஓனர்
பைக்கில் செல்வோருக்கு அபராதம் விதித்து பார்த்திருப்போம். ஆனால், இங்கு காருக்கு.. அதுவும் ரிப்பேர் ஆகி workshop-ல் நின்ற காரில் 3 பேர் ஹெல்மெட் இல்லாமல் பயணித்ததாக போலீசார் அபராதம் விதித்திருப்பது குறித்து பார்க்கலாம்..விரிவாக..
விழுப்புரம் நகரில் உள்ள மருத்துவமனை சாலையில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர், தேஜா ராம் மகன் கிஷான் ராஜ். இவரது hyundai santro கார் கடந்த 17ஆம் தேதி பழுதாகி விழுப்புரத்தில் உள்ள hyundai கார் பழுது நீக்கும் மையத்தில் தற்போது வரை உள்ளது. இந்த சூழலில் தான், கடந்த 23ஆம் தேதி கிஷான் ராஜின் செல்போனுக்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக மெசேஜ் வந்திருக்கிறது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிஷான் ராஜ், E-Challan மூலம் உடனடியாக, அதற்கான விளக்கத்தைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறார். அதில், பழுது பார்க்க அனுப்பியுள்ள தனது hyundai santro காரில் 3 நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக குறிப்பிடப்பட்டு இருந்ததுதான், அடுத்த ஷாக்..
பொதுவாகவே, காவலர்களுக்கு வாகன சோதனை செய்து அபராதம் விதிக்கும் கருவி வழங்கப்படுவது இல்லை. அநேகமான நேரங்களில் அபராதம் விதிப்பதற்காக, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு மட்டுமே இந்த கருவிகள் வழங்கப்படும்.
இப்படியான சூழலில் தான், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில், இன்னும் ஒருபடி மேலே போய் அங்குள்ள காவலர்கள் காவல் நிலையம் வழியாக சாலைகளில் செல்லும், வாகன ஓட்டிகளின் வாகன எண்களை மட்டுமே குறித்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், 23ஆம் தேதி மாலை, விழுப்புரத்தில் வாகன பழுதுநீக்கம் செய்யும் மையத்தில் இருந்த கிஷான் ராஜின் வாகனத்திற்கும் அரகண்டநல்லூர் போலீசார் 3000 ரூபாய் அபராதத்தை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார் முறையாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தால் போலி பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை வழிமறித்து அதில் வந்த மூன்று நபர்களையும் பிடித்து விசாரணை செய்து வாகனம் திருட்டு வாகனமா என கண்டுபிடித்து இருக்கலாம்.. ஆனால் தங்களது பணியை தவறாக செய்த காவல்துறையினர் பழுது பார்க்கும் மையத்தில் இருந்த வாகனத்திற்கு அதுவும் காரில் இருக்கும் மூன்று பேர் ஹெல்மெட் அணியாமல் வந்திருப்பதாக 3000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
உண்மையில் வாகன தணிக்கையின் நோக்கம் என்ன என்றால், அவ்வழியாக வரும் வாகனங்கள் முறையாக மோட்டார் வாகன சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உள்ளதா? வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளதா? வாகனத்திற்கு காப்பீடு உள்ளதா? தலைக்கவசம் அணிந்துள்ளனரா? என்பன உள்ளிட்ட சட்ட திட்டங்களைப் பின்பற்றி அவசியம் இருப்பின், அபராதம் விதிக்க வேண்டும். இந்த நிலையில், பைக் ஒன்றிற்கு பதிலாக, இப்படி கார் ஒன்றின் பதிவெண்ணைப் கொண்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, பழுதான காருக்கு எந்த விதமான நியாயமும் இல்லாமல் விதிப்பட்ட அபராதத்தை எப்படி செலுத்த முடியும்? என காரின் உரிமையாளர் புலம்பிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த விவகாரத்தில் அபராதம் யாரிடம் வசூலிக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது..