திருவண்ணாமலையில் போக்குவரத்து காவல் அதிகாரி கண் முன்பாகவே பக்தர்களை திருநங்கைகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களை குறிவைத்து திருநங்கைகள் ஆசிர்வாதம் செய்வதுபோல் நடித்து அவர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, பக்தர்களிடம் வாக்குவாதம் செய்வதும், தாக்கி பணம் பறிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்தும் திருநங்கைகளின் அட்டகாசம் குறையவில்லை. கோயிலுக்கு வந்த வெளிமாவட்ட பக்தர்களிடம் திருநங்கைகள் பணம் பறிக்கும் முயற்சியில் தகராறு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசாரைக்கூட அவர்கள் பொருள்படுத்தாமல் பக்தர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், கோயிலுக்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.