``நாங்க சொன்ன பிறகே அவசரமாக நடந்தது.. தவறை ஒப்புக்கொள்ளாமல் சமாளிப்பு’’ - நீலம் பண்பாட்டு மையம்
`நாங்க சொன்ன பிறகே அவசரமாக நடந்தது.. தவறை ஒப்புக்கொள்ளாமல் தமிழக அரசு சமாளிப்பு’’ - நீலம் பண்பாட்டு மையம் தாக்கு
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழா, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது. அதே சமயம், மாட்டிறைச்சி உணவு புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அரசு தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், கடந்த 20ம் தேதி முதல் உணவுத்திருவிழா நடைபெற்று வருகிறது.
35 அரங்குகளில் மக்களின் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஏராளமான மக்கள் உணவுத் திருவிழாவிற்கு படையெடுத்தனர்.
சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளை அவர்கள் வெளுத்துக் கட்டினர். சைவ ப்ரியர்களையும் உணவு திருவிழா ஏமாற்றவில்லை.
எல்லா வகையான உணவுகளும் நியாயமான விலையில் கிடைத்ததாக, இதில் கலந்துகொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஊரின் பாரம்பரிய கைமணத்தில் சமைக்கப்பட்ட எல்லா உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைத்ததாகவும், அதிக கூட்டம் இருந்தாலும் முறையான ஏற்பாட்டின் காரணமாக நெரிசல் இல்லை என்றும் தெரிவித்தனர்.
முன்னதாக சென்னை உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது.
பெருமளவிலான மக்கள் மாட்டிறைச்சி சாப்பிட கூடியவர்கள் என்றும், திட்டமிட்டே ஓர் உணவு புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம், உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை என்றும், பதினேழாவது அரங்கில் பீப் வகை உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் முதல் 2 நாட்களில் பீப் தயார் செய்யப்படவில்லை என்றும், மூன்றாவது நாளில் தான் பீப் தயாரிக்கப்பட்டதாகவும் நீலம் பண்பாட்டு மையத்தினர் தெரிவித்தனர்.
ரஞ்சித்குமார், நீலம் பண்பாட்டு மையம்
“தவறை ஒப்புக்கொள்ள முடியாமல் தமிழக அரசு சமாளித்துள்ளது“
ஞாயிற்றுக்கிழமை ஒருநாளில் மட்டும் 79 ஆயிரம் பேர் உணவுத்திருவிழாவில் பங்கேற்றதாகவும், ஒரேநாளில் 39 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு உணவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.