காலையில் கொல்லப்பட்ட மாயாண்டி.. மாலையில் கொலைகாரனான மாயாண்டி.. திடுக்கிட்ட திருநெல்வேலி
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், போலீசார் என நிறைந்து இருக்க..வேகமாக வந்த கார் ஒன்று நீதிமன்ற வாசலில் நிற்க அடுத்த நொடி அங்கு நடந்த சம்பவம் பலரையும் பதற வைத்தது.
நீதிமன்ற வாசலில் நடந்த சம்பவத்தைப் பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தாலும் ஒரு சில வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
திருநெல்வேலி மாவட்டம் கீழ்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு கீழ்நத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார். ஜாமினில் சமீபத்தில் வெளிவந்த மாயாண்டி வழக்கு விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றத்திற்கு அடிக்கடி வந்து சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக மாயாண்டி நீதிமன்றம் வந்த போது எதிர்த்திசையில் வேகமாக வந்த கார் ஒன்று திடீரென நின்றுள்ளது. அதிலிருந்து படபடவென இறங்கிய நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சரமாரியாக மாயாண்டியை வெட்டச் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்..
உடனே கொலையாளிகள் காரில் தப்பி ஓடியுள்ளனர். இருந்தாலும் சில வழக்கறிஞர்கள் , பொதுமக்கள், போலீசார் ஆகியோர் சேர்ந்து சுதாரித்து கொலையாளிகளில் ஒருவரான ராமகிருஷ்ணன் என்பவரைப் பிடித்தனர்.
எப்போதும் 20 போலீசார் பாதுகாப்புடன் இருக்கும் மாவட்ட நீதிமன்ற வாசலில் கொலை நடந்ததால், அங்கிருந்த வழக்கறிஞர்கள் போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பானது. மேலும் அவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டததில் ஈடுபட்டதால் சூழ்நிலை பதற்றத்தை ஏற்படுத்தியது..
இந்த சம்பவத்தில் ஒரு குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்த வழக்கறிஞர் கார்த்திக், கொலையாளிகளைப் பிடிக்க ஒரு போலீசாரும் முன் வரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் நெல்லை போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க முயன்று வருவதாகத் தெரிவித்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலைக்குப் பழிதீர்க்கும் விதமாக மாயாண்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
போலீசார் நிரம்பிய நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த இக்கொலை சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு கொலை நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன் என்பவரை மாயாண்டி என்பவர் கத்தியால் குத்தியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மனதை ரணமாக்கி உள்ளது. இதில், உயிரிழந்த மணிகண்டன் சட்டக் கல்லூரி மாணவர் ஆவார்.
இது குறித்தும் சேரன்மாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.