பதுங்கி பாய்ந்த மும்பை..இறுதியில் இறங்கி சம்பவம்.. முரட்டு ட்விஸ்ட்.. வாயடைத்து போன மற்ற டீம்கள்
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் களைகட்டியது. முதல் நாளில் எந்தந்த அணிக்கு யார் யார் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு....
2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதையொட்டி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்திற்கும் குறைவில்லாமல் நடந்தேறியது மெகா ஏலம்...
10 அணிகளும் ஏலத்தில் கடுமையாக மல்லுக்கட்டின. போட்டிபோட்டுக் கொண்டு வீரர்களை ஏலம் எடுத்தன. சுமார் 110 கோடியை இருப்பு வைத்திருந்த பஞ்சாப்தான் முதல் வீரர் ஆக அர்ஷ்தீப் சிங்கை ஏலம் எடுத்தது. 2 கோடி ரூபாய் அடிப்படைத் தொகை கொண்ட அர்ஷ்தீப்பை ஏலம் எடுக்க, ஹைதராபாத்தும் ராஜஸ்தானும் முனைப்பு காட்டின. கடைசியில் RTM மூலம் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் ஏலம் எடுத்தது.
கடந்த சீசனில் கோப்பையை வென்ற ஷ்ரேயாஸ் ஐயருக்காக டெல்லியுடன் மல்லுக்கட்டிய பஞ்சாப், 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு அவரை ஏலம் எடுத்தது. சுழற்பந்துவீச்சாளர் சஹாலை 18 கோடிக்கும், ஆல்ரவுண்டர்கள் ஸ்டாய்னிஸை 11 கோடிக்கும் நேதல் வதேரா, மேக்ஸ்வெல்லை 4 கோடியே 20 லட்சத்துக்கும் பஞ்சாப் ஏலம் எடுத்தது. வைஷக் விஜயகுமார், யாஷ் தாகூர், ஹர்ப்ரீத் பிரார், விஷ்ணு வினோத் ஆகியோரையும் பஞ்சாப் ஏலம் எடுத்தது.
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகள் போட்டா போட்டி போட்டன. டெல்லியும் RTM மூலம் போட்டியில் இணைய 27 கோடி ரூபாய்க்கு பண்ட்டை ஏலம் எடுத்தது லக்னோ.... ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என சாதனை படைத்துள்ளார் பண்ட்... ஆவேஷ் கான், மில்லர், அப்துல் சமாத், மிட்ச்செல் மார்ஷ், மார்க்ரம், ஆர்யன் ஜுயல் ஆகியோரும் லக்னோ அணியில் ஐக்கியமாகி உள்ளனர்.
ஐந்து முறை சாம்பியனான சென்னை அணி மண்ணின் மைந்தனான அஸ்வினை கடுமையாகப் போராடி ஒன்பதே முக்கால் கோடிக்கு வசப்படுத்தியது. எதிர்பார்த்தபடி கான்வேவையும் ரச்சினையும் ஏலத்தில் வசப்படுத்திய சென்னை, ஆப்கன் இளம் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவை 10 கோடிக்கு ஏலம் எடுத்து ரசிகர்களுக்கு சற்று ஷாக் அளித்தது. கலீல் அகமது, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் சென்னை வசமாகியுள்ளனர்.
ஆரம்பம் முதலே அமைதி காத்த மும்பை வேகப்பந்துவீச்சுப் புயல் டிரெண்ட் போல்ட் ஏலத்திற்கு வந்ததும் சுறுசுறுப்படைந்தது. போல்ட்டை பன்னிரென்டரை கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை, நமன் தீர், ராபின் மின்ஸ், கரண் சர்மா ஆகியோரையும் கொண்டு சென்றது.
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட்டை பனிரென்டரை கோடிக்கு வளைத்துப் போட்ட பெங்களூரு அணி, இங்கிலாந்து வீரர்கள் சால்ட், லியாம் லிவிங்ஸ்டனையும் ஏலம் எடுத்தது. ஜித்தேஷ் சர்மா, ரகீஷ் தார், சுயாஷ் சர்மாவையும் ஏலம் எடுத்துள்ள பெங்களூரு 2ம் நாள் ஏலத்தை சுமார் 30 கோடி ரூபாய் இருப்புடன் எதிர்கொள்ள உள்ளது.