செல்லப் பிராணிகள் மலம் கழித்தால் மூவாயிரம் ரூபாய் வரை அபராதம் மற்றும் செல்ல பிராணிகளை இயற்கை உபாதைகளுக்காக அழைத்துச் செல்ல லிப்ட் பயன்படுத்த தடை என அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை சென்னை நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 78 வயது மூதாட்டி மனோரமா ஹிதேஷி, தாம் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள செல்ல பிராணிகளுக்கான விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, குடியிருப்போர் சங்கம் முன் வைத்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, விலங்குகள் நல வாரியத்தின் விதிகள் சட்டப்படி பிறப்பிக்கப்பட்டவை என்று கூறினார். இதனால், அந்த விதிகள் செல்லாது என்றும் செல்லப் பிராணிகளுக்கு அபராதம் விதிக்க தடை விதித்தும் உத்தரவிட்டார்.