செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் பாபு. 44 வயதான இவருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாபு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது திடீரென தான் எடுத்து வந்த மண்எண்ணெயை உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் பாபுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பாபுவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.