`போலி குழந்தை’ `ஒரிஜினல் வாரிசு’ ஷிண்டே Vs தாக்கரே - யார் உண்மையான சிவசேனா? மக்கள் எழுதிய தீர்ப்பு
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் யார்...? உண்மையான சிவசேனா என்ற போராட்டத்திற்கும் எண்ட் போட்டிருக்கிறது.
2022 ஆம் ஆண்டு சிவசேனாவை உடைத்துக் கொண்டு பாஜகவோடு கைக்கோத்தவர் ஏக்நாத் ஷிண்டே. பாஜகவோடு கைக்கோர்த்த வேகத்தில் மாநிலத்தின் முதல்வர் அரியணையில் ஏறிவிட்டார். அதிக எம்.எல்.ஏ.க்களை தன்வசமாக்கிய ஏக்நாத் ஷிண்டே... 2023 ஆம் ஆண்டு கட்சி சின்னம்... பெயர் எல்லாவற்றையும் தனதாக்கி உத்தவ் தாக்கரேயை தனிமரமாக்கினார்.
ஆனால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று ஓங்கி ஒலித்த உத்தவ் தாக்கரே, தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்புக்கு சின்னத்தையும், கட்சி பெயரையும் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார். வழக்கு நிலுவையில் இருக்க.. மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்க போகிறது என்ற வேள்விக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பதில் கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 15 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா ஷிண்டே அணி 7 இடங்களை வசமாக்கியது. அதுவே காங்கிரஸ் கூட்டணியில் 21 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா உத்தவ் அணிக்கு 9 இடங்களில் வெற்றி கிடைத்தது.
ஒப்பீட்டளவில் வெற்றி விகிதம் ஷிண்டே தரப்புக்கு அதிகமாக இருந்தாலும், இருதரப்பும் சம அளவில் மக்கள் ஆதரவை பெற்றதாகவே பார்க்கப்பட்டது.
இதனையடுத்து யார் உண்மையான சிவசேனா என்ற போருக்கு தீர்ப்பளிக்கும் battleground ஆக பார்க்கப்பட்டது மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல். தீவிர இந்துத்துவா கொள்கையை கொண்டது சிவசேனா.
ஆனால் காங்கிரஸ் கட்சியோடு உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்தது கொள்கைக்கு மாறானதாகவே பார்க்கப்பட்டடது. அதிகாரத்திற்காக தனது தந்தை வகுத்த சித்தாந்தத்திலிருந்து உத்தவ் தாக்கரே விலகிவிட்டார் என குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி.
உத்தவ் தாக்கரேவை நக்லி சாந்தான்... அதாவது போலி குழந்தை என்று விமர்சித்தார் பிரதமர் மோடி. ஷிண்டேதான் பால் தாக்கரேவின் உண்மையான வாரிசு என பாஜக தீவிர பிரசாரம் செய்தது.
நாங்கதான் பால் தாக்கரே வாரிசு, நாங்கதான் உண்மையான சிவசேனா என இருதரப்பும் சொல்ல மக்கள் தீர்ப்பு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தேர்தல் முடிவில் ஏக்நாத் ஷிண்டே அமோக வெற்றியை வசமாக்கிவிட்டார். பாஜக கூட்டணியில் 81 இடங்களில் போட்டியிட்ட ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி 57 இடங்களை வசமாக்கியது.
இதுவே காங்கிரஸ் கூட்டணியில் 92 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா உத்தவ் அணி வெறும் 20 இடங்களையே வசமாக்கியிருக்கிறது.
ஷிண்டே அணியின் வெற்றி விகிதம் அதிமாக இருக்க.. 'மக்கள் ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனாவாகவும், அஜித் பவார் அணியை உண்மையான தேசியவாத காங்கிரசாகவும் ஏற்றுக்கொண்டனர் என கூறியிருக்கிறார் பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்...
அவரைப்போலவே பலரும் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என மக்கள் தீர்ப்பளித்துவிட்டதாக சொல்ல, அதெல்லாம் இல்லை இது மக்கள் வழங்கிய தீர்ப்பல்ல, இது அதானி உதவியால் வந்துவிட்டது என சொல்கிறது உத்தவ் தரப்பு.
எப்படி சொன்னாலும், பால் தாக்கரே மகனாக அரசியலில் செல்வாக்கை காட்டிய உத்தவ் தாக்கரே, பின்னடைவை சந்தித்து இருப்பது அவரது உண்மையான சிவசேனா போருக்கு தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.