வங்கதேசத்தில் உறவினரை கொலை செய்துவிட்டு திருப்பூரில் பதுங்கி இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வங்க தேச இளைஞர்கள் பதுங்கி உள்ளனரா என கண்டறிய காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். வெங்கமேடு பகுதியில் சோதனை மேற்கொண்ட பொழுது தன்வீர் அகமது என்பவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரும், அவரது மனைவி சோஹாசிமும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும்,
மாமாவுடன் ஏற்பட்ட தகராறில் மாமாவை 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து விட்டு இந்தியாவிற்குள் ஊடுருவி கோபிச்செட்டிப்பாளையம்
வந்து வாழ்ந்து வந்துள்ளது தெரிய வந்தது. 7 மாதங்களுக்கு முன் வங்க தேசத்தை சேர்ந்த மம்முல் 28 என்பவர் உதவியுடன் திருப்பூர் வந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. இதனை
தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் இவர்களுக்கு திருப்பூர் முகவரியில் ஆதார் கார்டு எடுக்க 6 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு உதவிய இடைத்தரகர் மாரிமுத்து என்பவரையும் கைது செய்தனர்.