மகன் கொலைக்கு பழிதீர்க்க 1 கோடிக்கு கூலிப்படை - காஞ்சிபுரத்தை அதிரவைத்த சதித்திட்டம்

Update: 2024-02-12 11:32 GMT

மகன் கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக, சுமார் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கூலிப்படை மூலம் திட்டம் தீட்டி வந்ததாக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் எச்சூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகனான ஆலபர்ட்டை, கடந்த 6 மாதத்திற்கு முன்பு கூலிப்படையினர் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சுரேஷை கொலை செய்யும் நோக்கில் கூலிப்படையினர் நோட்டமிட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில், கொட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கூலிப்படைகளின் தலைவன் முருகன் என்பவர் அடிக்கடி எச்சூர் பகுதிக்கு வந்து செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது, கட்சிப்பட்டு பகுதியின் 13 ஆவது வார்டு கவுன்சிலரின் வீட்டில் முருகன் பதுங்கி இருப்பது தெரியவர, கவுன்சிலரின் கணவரான நவீன் மற்றும் முருகனையும் போலீசார் கைது செய்தனர். அப்போது, தனது மகன் கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து எச்சூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் டோமினிக், கூலிப்படையை கூட்டி திட்டம் தீட்டியது தெரியவந்தது. உடனே, விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், டோமினிக், முருகன் மற்றும் நவீன் உட்பட 11 பேரை கைது செய்த நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்