"எனக்கு லாயர் வேண்டாம்" - தாமாக வாதாடிய மார்ட்டின் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
கேரளாவில் களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினை நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொச்சி அருகே உள்ள களமசேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெபக் கூட்டத்தின்போது குண்டு வெடித்து, 12 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 21 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டின், எர்ணாகுளம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்காக சட்ட உதவி மையத்தின் வழக்கறிஞர் ஆஜராக முன்வந்த நிலையில், தனக்காக வழக்கறிஞர் ஆஜராக வேண்டாம் எனவும், தானே வாதிட விரும்புவதாகவும் டொமினிக் மார்ட்டின் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவரை நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், காக்கநாடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, அடையாள அணிவகுப்பு நடத்த காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், டொமினிக் மார்ட்டினை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.