தமிழக எல்லைக்குள் வந்து ஆட்டம் காட்டிய கேரள ஆம்னி பேருந்து.. தமிழக அதிகாரிகள் செய்த தரமான சம்பவம்
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த பேபி கிரீஸ், ராபின் டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது டிராவல்ஸில் உள்ள பேருந்து ஒன்றுக்கு, அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்று, பத்தனம்திட்டாவில் இருந்து கோவைக்கு பேருந்து சேவையை தொடங்கினார். கேரள மோட்டார் வாகனத்துறை இதற்கு அனுமதி மறுத்த நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். முன்பதிவு செய்த பயணிகளை அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து பத்தனம்திட்டாவிலிருந்து கோவைக்கு பேருந்து சேவையை தொடங்கியபோது, கேரள மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் மறித்து அபராதம் விதித்தனர். பின்னர், அந்தப் பேருந்து தமிழக எல்லைக்குள் வந்தபோது, கந்தேகவுண்டன் சாவடியில் வழிமறித்த தமிழக போக்குவரத்து அதிகாரிகள், 70 ஆயிரத்து 410 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்நிலையில், அபராதத் தொகையை செலுத்தப்போவதில்லை என்றும், நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் டிராவல்ஸ் பேருந்து உரிமையாளர் தெரிவித்துள்ளார்.