சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு - ஜெகஜோதியான சபரிமலை | Sambarimalai | Ayyappan | Thanthi TV
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, மாலை அணிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜையின் போது ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அணிவிக்கப்படும். அதன்படி 22 தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தங்க அங்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பம்பையை அடைந்த தங்க அங்கிக்கு விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது. தங்க அங்கி 18 ஆம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐய்யப்பா என்று சரண கோஷம் எழுப்பி ஐய்யப்பனை தரிசனம் செய்தனர். தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , கேரளா தேவசம் போர்டு அமைச்சர் வாசன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்