விஜிலென்ஸ் பறிமுதல் செய்த ரூ.500.. 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசயம்
கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கடந்த 1996-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய், 28 ஆண்டுகளுக்குப் பிறகு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த கதிர்மதியோன், கடந்த 1996-ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தபோது, மின்வாரிய அதிகாரியிடம் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அப்போது, அந்த அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோதிலும், கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் திரும்ப வழங்கப்படாததால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் வந்தது. அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான கதிர்மதியோனிடம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணம் திரும்ப கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ள கதிர்மதியோன், பணத்தை விரைவாக வழங்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் அந்த பணம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.