"கூலி வேலை செய்பவர்கள் நாங்கள்.. வரி தர முடியாது" போராட்டத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..
11 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்ட நிலையில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்க தலைவர் சின்னத்துரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இதனை கண்டித்து 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சோமரசன்பேட்டையில் உள்ள வயலூர் சாலையில் திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டனர்... இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் அப்போது ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் நிலவியது. உடனடியாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.