ரசித்து ருசித்து சாப்பிட்ட சாலையோர கடைகளில் சிக்கன் பிரியாணியில் காக்கா?
திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் சாலையோரம் உள்ள பிரியாணி கடைகளில், காகத்தின் இறைச்சி கலக்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. நயப்பாக்கம் காப்புக்காடு அருகில் உள்ள திருப்பாக்கம் கிராமத்தில் காகங்கள் கொல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், காகங்களை விஷம் வைத்து பிடித்த ரமேஷ், பூச்சம்மா தம்பதியை கைது செய்து, 19 காகங்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் தங்கள் குடும்பத் தேவைக்காக காகங்களை கொன்றதாக தெரிவித்ததால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விஷம் வைத்து கொல்லப்படும் காகங்கள், சாலையோர ஹோட்டல்களில் சமைத்து விற்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.