ஆம்ஸ்ட்ராங் கொலை தொடங்கி, அரசு மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் வரை

Update: 2024-12-28 17:03 GMT

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தான் இந்த ஆண்டின் குற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் பிரதானம். இவரின் கொடூர கொலையும், இதன் தொடர்ச்சியாக பிரபல ரவுடிகள் கைதும் என்கவுன்ட்டர்களுமாக பரபரபத்து கிடந்தது போலீஸ் வட்டாரம்... உள்துறை செயலாளர், போலீஸ் கமிஷனர் முதற்கொண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் இந்த ஒரு கொலையால்...


கேரளாவில் ஏடிஎம் கொள்ளை.. தமிழகத்தில் என்கவுன்ட்டர்...

கேரளா மாநிலம் திருச்சூரில் வரிசையாக மூன்று ஏடிஎம் கள் கொள்ளையடிக்கப்பட்டு அதிலிருந்த 68 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் சேலம் வழியாகத் தப்ப முயன்ற போது போலீஸ் நடத்திய என்வுகவுன்ட்டரில் ஒருவர் கொல்லப்பட்டார். மீதமுள்ள 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

எரிந்த நிலையில் சடலம்.. இன்னும் விடை தெரியாத மர்மம்..

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயக்குமார் அவரது வீட்டுத் தோட்டத்தின் அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது வரை தற்கொலையா? கொலையா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

உலுக்கிய சிறுமி கொலை

புதுச்சேரியில் 5ம் வகுப்பு படித்து வந்த சிறுமி பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரை விட்ட துயரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொலையாளிக்கு தக்க தண்டனை ஒரு வாரத்தில் என்றார் அப்போதைய ஆளுநர் தமிழிசை. ஆனால் கொலையில் சம்பந்தப்பட்ட 2 பேரில் முதியவரான விவேகானந்தன் சிறையில் உயிரை மாய்த்துக் கொண்டார்..

சென்னையில் ஆணவக்கொலை - உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த காதல் ஜோடி பிரவீன், ஷர்மிளா திருமண பந்தத்தில் இணைந்து வாழ்க்கையை தொடங்கிய போதுதான் நேர்ந்தது அந்த துயரம். ஷர்மிளாவின் சகோதரர்கள் செய்த சூழ்ச்சியில் பிரவீன் கொல்லப்பட, கணவன் இழந்த துயரத்தில் ஷர்மிளாவும் உயிரை மாய்த்துக் கொண்டார்...

அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - கதிகலங்க வைத்த இளைஞர்

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாய்க்குச் சரியான சிகிச்சை அளிக்காத ஆத்திரத்தில் சென்னை கலைஞர் பன்நோக்கு மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவர் பாலாஜி என்பவரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த மருத்துவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். இந்த சம்பவத்தில் கைதான விக்னேஷ் ஜாமினில் விடுதலையானார்..

அமலாக்கத்துறையும், அதிரடிகளும்...

தமிழகத்தில் உள்ள மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இது தொடர்பாக ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை விசாரணை நடத்தினர்.. அதேபோல் பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்டோர் வழக்கிலும் அமலாக்கத்துறை அதிரடி காட்டியது..

எலி மருந்தால் பறிபோன பிஞ்சுகளின் உயிர்..

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி மேலாளர் கிரிதரன்

தனது வீட்டை பெஸ்ட் கன்ட்ரோல் ஊழியர்கள் மூலமாகத் தூய்மைப்படுத்தும் போது தான் அரங்கேறியது அந்த சம்பவம்... அளவுக்கு அதிகமாக வைத்த மருந்தால் 6 வயது மகளும், ஒரு வயது மகனும் உயிரிழந்தது பலரையும் கலங்க வைத்தது...

திருமணம் செய்ய மறுத்த ஆசிரியை குத்திக் கொலை

தஞ்சையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி அவரது காதலனால் பள்ளி வளாகத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த ஆண்டின் அதிர்ச்சி ரகம். ஆசிரியையை கொலை செய்த மதன் கைது செய்யப்பட்டாலும், சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் நிலைகுலைந்து போயினர்..

திருப்பூரை திகிலாக்கிய 3 பேர் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வயதான பெற்றோர் மற்றும் ஐடி ஊழியரான அவர்களின் மகன் என 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலை நடந்து நாட்கள் கடந்த போதிலும் இன்னும் பதில் கிடைத்தபாடில்லை...

Tags:    

மேலும் செய்திகள்