பழனி அருகே விவசாய பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை, அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர் சரிசெய்ய விடாமல் தடுத்ததால் மற்றொரு விவசாயி கட்டிலை போட்டு நடுரோட்டில் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கோம்பைபட்டி மூலக்கடையில் பழனிமுத்து என்பவர் அரசு நிலத்தையும் சேர்த்து உழவு செய்துள்ளார். விவசாய பணியின் போது அவ்வழியே சென்ற குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனை சரி செய்ய ஊராட்சி பணியாளர்கள் வந்த போது அவர்களைத் தடுத்த பழனிமுத்துவின் அத்தை ஈஸ்வரி அநாகரிகமாக பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பக்கத்து தோட்டக்காரரான ராஜாராம் சாலையை மறித்து கட்டிலைப் போட்டு போராட்டம் நடத்தினார். விசாரணைக்கு வந்த போலீசாரிடமும் ஈஸ்வரி வாக்குவாதம் செய்த நிலையில், காவல்துறையினர் இருதரப்பையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.