ஊட்டி நகராட்சி கமிஷனரை ரகசியமாக கண்காணித்த போலீஸ்.. பாலோ செய்த போது காத்திருந்த அதிர்ச்சி
உதகை நகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் ஜஹாங்கீர் பாஷா என்பவர், அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார், ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், கோத்தகிரி வழியாக காரில் சென்று கொண்டிருந்த ஜஹாங்கீர் பாஷா, மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காரை நிறுத்தி லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தொட்டபெட்டா ஜங்ஷன் பகுதியில் ஒருவரிடம் பணத்தை வாங்கி விட்டு செல்லும்போது பின்தொடர்ந்து வந்த ஆய்வாளர் பரிமளா தேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலிசார், அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவரை உதகை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார், லஞ்சம் கொடுத்தவர்களையும் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை தொடர்ந்து நடைபெறும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.