நெல்லையில் அடுத்த அதிர்ச்சி - பஸ் ஸ்டாண்டில் அரசியல் புள்ளிக்கு நேர்ந்த சோகம்
நெல்லை மாவட்டம், வள்ளியூர் பேரூராட்சியில் தான், இந்த சோகம் நடந்துள்ளது. திமுக வார்டு செயலாளர் முருகன் என்பவர்தான், இங்கு பேருந்து நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் செப்டிங் டேங் குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்..
வள்ளியூர் பேரூராட்சியில், நகர சீரமைப்பு திட்டத்தின் கீழ், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தான், செப்டிக் டேங்கிற்காக தோண்டிய பெரிய குழியில் முதியவர் விழுந்திருக்கிறார்.
புதிய பேருந்து நிலையத்தில் செப்டிக் டேங்க் கட்டுவதற்காக குழிகள் தோண்டப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை பலகையோ அல்லது தடுப்புகளோ என எதையுமே அமைக்காமல், திறந்தவெளியாக இருந்த இந்த செப்டிக் டேங்க் குழிதான், முதியவரின் உயிரைப் பறிக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமே காரணம் என கூறப்படுகிறது.
ஆள் நடமாட்டம் அதிகமான பகுதியில், தோண்டி இருந்த இந்த குழிக்குள், ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பிறகு சம்பவ இடத்தில், சடலத்தை கைப்பற்றிய வள்ளியூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில், வள்ளியூர் சொக்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த 60 வயதான முருகன் என்பவரே என்பது கண்டறியப்பட்டது.
வள்ளியூர் நகர பஞ்சாயத்து 9வது வார்டு திமுக செயலாளரான முருகன், இரவில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக அங்கே தடுப்புகள் ஏதுமில்லாமல், திறந்தவெளியாக இருந்த குழிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருப்பது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதே நேரத்தில், பேரூராட்சி நிர்வாகமும், இதற்கான ஒப்பந்ததாரரும் செப்டிக் டேங்க் குழி பகுதியில் தடுப்புகள் அமைக்க தவறியதன் விளைவாகவே, தங்களது வீட்டில் ஒருவரை இழந்து ஒரு குடும்பமே பரிதவித்து வருகிறது.
இப்படி, அலட்சியமாக பணி செய்த ஒப்பந்ததாரர் மீதும் பேரூராட்சி நிர்வாகம் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.