மொத்த தமிழகமே மெரினாவில்..வந்து கொண்டே இருக்கும் மக்கள் குவியும் கூட்டம்..திக்குமுக்காடும் வங்கக்கரை
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடக்கும் உணவு திருவிழா தான், சென்னையில் இப்போது ஹாட் டாபிக்.
எப்படி நம்மில் பலருக்கும் ஊர் ஊராக சுற்றுவதும், பிடித்த கேம்களை விளையாடுவதும், ட்ரெண்ட்டுக்கு ஏத்த ட்ரஸ்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி அணிவதும் என சில விஷயங்கள் இருக்கும். அதிலும், சிலருக்கு தேடி தேடி வெரைய்ட்டி வெரைய்ட்டியான உணவுகளை சாப்பிட்டுப் பார்ப்பதில், அலாதியான ஒரு பிரியம் இருக்கும்.
அப்படி இருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாகவே, சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட உணவு திருவிழா ஸ்டார்ட் ஆகியுள்ளது. இந்த உணவு திருவிழாவை, துவக்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுகளை ருசித்துப் பார்த்தார்.
உணவுத் திருவிழாவில், சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட் என 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருக்கின்றன.
அதேபோல, தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டினம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி என 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறப்படுகின்றன.
அரியலூர் வறுத்த முந்திரி, செங்கல்பட்டு எள்ளுருண்டை, சென்னை வேர்க்கடலை நெய் லட்டு, கருப்பு கவுனி அரிசி லட்டு, கோவை பிட்ரூட் மால்ட் பொடி, கடலூர் சங்குப்பூ சர்பத், தருமபுரி குதிரைவாலி ரோஸ் லட்டு, திண்டுக்கல் காராபூந்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, காஞ்சிபுரம் முட்டை மிட்டாய் என இங்கு இடம்பெற்றுள்ள உணவு வகைகளைக் கூறும் போதே தித்திக்கின்றது.
இங்கு இடம்பெற்ற 67 வகையான உணவுப் பொருட்களை பலரும் வீட்டிற்கு வாங்கிக் கொண்டும் செல்கின்றனர்.
21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உணவு திருவிழா, மதியம் 12.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெறும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையிலும், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு திருவிழா தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.