புத்தாண்டு கொண்டாட்டம் - ECR செல்ல நினைக்கும் சென்னைவாசிகள் கவனத்திற்கு..
"புத்தாண்டு கொண்டத்தின் போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது.."
தனியார் நட்சத்திர ஓட்டல் பொது மேலாளர்களை அழைத்து காவல் துறை சார்பில் அறிவுறுத்தல்!
புத்தாண்டு கொண்டத்தின் போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று தனியார் நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், பொது மேலாளர்களை அழைத்து காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குநர்கள், உரிமையாளர்களை அழைத்து திருமண மண்டபம் ஒன்றில் மாமல்லபுரம் துணை கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிஅபிராம்; தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் டிசம்பர் 31-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது.
மேலும் எந்த ஓட்டல்களிலும் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. குறிப்பாக கடற்கரை ரிசார்ட்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது.
பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்குள்ள கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி காமிரா கண்டிப்பாக இயங்க வேண்டும். அறை எடுத்து கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களிடம் ஆதார் அட்டை, தேர்தல் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை பெற்றுக்கொண்டே ஓட்டல் நிர்வாகங்கள் அறைகள் ஒதுக்கி தரவேண்டும். குறிப்பாக தங்குபவர்களின் செல்போன் நம்பரை கண்டிப்பாக அவர்களிடம் வாங்கி நட்சத்திர விடுதி பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அடையாள அட்டை சமர்பிக்காத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது. என கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் நட்சத்திர ஓட்டல் மேலாளர்கள், நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. அப்போது புத்தாண்டு கொண்டாடத்தின்போது தாங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய சில சந்தேகங்களையும் ஒட்டல்மேலாளர்கள் போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.