கடலூரில் தனியார் மருத்துவமனைக்கு 8ம் வகுப்பு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்-சிதம்பரம் சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி கடலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் மருத்துவமனைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்காத நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனால் நோயாளிகளும் உறவினர்களும் நிம்மதி அடைந்தனர். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் என்பதும், கடலூரில் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோது இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.