எங்கேயோ செய்த வினை? சென்னை சரித்திர பதிவேடு குற்றவாளி வீட்டில் பற்றிய தீ...சொல்லி சொல்லி கதறும் தாய்
சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்குள் புகுந்து இருசக்கர வாகனங்களையும், சரித்திர பதிவேடு குற்றவாளியின் வீட்டையும் தீ வைத்து எரித்த கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி பகுதியில் அமைந்திருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சிலம்பரசன், டேவிட் சாந்தகுமார், மணிமாறன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இரவு நேரத்தில் இவர்கள் தங்கள் வீட்டருகே நிறுத்தி வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்களையும் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அத்துடன் அதே பகுதியில் வசிக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளியான ஹரிஷ்குமார் வீட்டுக் கதவையும் அவர்கள் எரித்து விட்டு தப்பியுள்ளனர்... தீ எரிவதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் பதறிப்போய் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். ஹரிஷ்குமாரை பழிவாங்க வந்த கும்பல் அவர் வீட்டு கதவை மட்டுமல்லாமல் ஆத்திரத்தில் வண்டிகளையும் கொளுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் 18 வீடுகள் உள்ளதாகவும், இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மக்கள் குமுறுகின்றனர். அதிலும் தீ வைத்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் தீப்பற்றி இருந்தால் பெரிய அசம்பாவிதமே நிகழ்ந்திருக்கும் என மக்கள் கண்ணீர் மல்க கவலை தெரிவித்தனர்.