தமிழ்த்தாயின் தலைமகன் அண்ணா வீட்டு திருமணம்... அரசியல் தலைவர்களே இல்லாமல் நடந்த அண்ணா வீட்டு நிகழ்ச்சி
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கொள்கைத் தலைவராக பின்பற்றும் அறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தியின் திருமணம், எந்த அரசியல் கட்சித் தலைவர்களுமே இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. பார்க்கலாம்.. விரிவாக..
தமிழ்நாட்டில் அண்ணா என்ற பெயரைத் தெரியாத யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் புகழ் தென்னிந்தியா முழுவதும் இன்னமும் உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்..
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய் வரை அண்ணாவின் பெயரை உச்சரித்து தான் அரசியலில் அடி வைக்கிறார்கள். அதிலும் அண்ணாவின் கொள்கைகள் தான் நம்முடையதும் என தவெக மாநாட்டில் பேசியிருந்தார் விஜய்..
பத்திரிகையாளர், எழுத்தாளர், மேடை பேச்சாளர், சீர்திருத்தவாதி, அரசியல்வாதி என்பன உள்ளிட்ட பன்முகங்களைக் கொண்டவர் தான், பேரறிஞர் அண்ணா. மாறி மாறி நீண்டகாலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தமிழ்நாட்டில் ஆண்டவர்களும், தற்போது ஆள்பவர்களும் தங்களை பேரறிஞர் அண்ணாவின் மாணவர்கள் என்றும் கொள்கைத் தலைவராக அவரையே ஏற்று, அவரது வழியையே தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.
ஏன் ஒருபடி மேலேயும் போய், அண்ணா தங்களுக்கே சொந்தம் எனக் கொண்டாடியும் வருகின்றனர்.
அடிப்படையில் பெரியாரின் மாணவரான அண்ணா, கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்தபோதும், ஒன்றே குலம்..ஒருவனே தேவன் என்பதை தனது முழக்கமாகவே கொண்டு ஏழைகளின் நலனுக்கே முக்கியத்துவம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை பெருமைக்குரிய தலைவராக விளங்கிய அறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தியின் திருமணம் எந்த ஒரு அரசியல் தலைவரும் இல்லாமல், பெரிய பெரிய ஆளுமைகள் யாரையும் முன்னிறுத்தாமல் மிகவும் எளிமையாக அரங்கேறியுள்ளது..
மதுரை ஸ்ரீ பாண்டி கோயில் அருகே உள்ள தனியார் மகாலில் அண்ணாவின் வளர்ப்பு மகனான பரிமளத்தின் பேத்தியும், அண்ணாவின் கொள்ளுப்பேத்தியுமான பிரித்திகா ராணி - சித்தார்த் பழனிச்சாமி ஆகியோருக்கு இரு வீட்டார் முன்னிலையில் எந்தவித அரசியல் கட்சித் தலைவர்களும் இல்லாமல், உறவினர்களின் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது..
தங்களுக்கு குழந்தைகள் இல்லாததால், தனது சகோதரியின் மகள் பெற்ற பிள்ளைகளான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக வளர்த்துவந்தார், அறிஞர் அண்ணா.
இந்த சூழலில், அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் - சரோஜா பரிமளா தம்பதியினரின் மகள் வழிப்பேத்தி சுருத்திகா ராணியின் மகள் பிரித்திகா ராணிக்கும், பி.சரவணபூபதி - சி.ரோசலின் தம்பதியினரின் மகன் சித்தார்த் பழனிசாமிக்கும் மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் தனியார் மண்டபத்தில் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இதில், IFS அதிகாரியான பிரித்திகா ராணி இந்திய தூதரகத்திலும், IAS அதிகாரியான சித்தார்த் பழனிசாமி ராஜஸ்தான் மாநிலத்தில் துணை ஆட்சியராகவும் பணியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..