நெல்லை கொலையில் ட்விஸ்ட்.. மானம் காத்த தனி ஒருவன் - உய்க்காட்டானின் தரமான சம்பவம்

Update: 2024-12-22 06:24 GMT

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகே விசாரணை ஒன்றுக்காக ஆஜராக வந்திருந்த கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட கும்பலினர், அரிவாளால் பயங்கரமாக வெட்டி கொலை செய்தனர்.

இதைப்பார்த்து அந்த பகுதியில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நடு நடுங்கிப் போகவே, வெட்டிய கையோடு அக்கும்பலினர் காரில் தப்பியோடினர். இதை அடுத்த, சில மணி நேரத்தில் குற்றவாளிகளை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு எஸ்ஐ உய்க்காட்டான் என்பவர் மட்டும் விரட்டிப் பிடித்துள்ளார்.

முகம், கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், மாயாண்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

பட்டப் பகலில், பல போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கும் நீதிமன்றத்தின் அருகேயே, ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தையே திடுக்கிட வைத்திருக்கிறது.

அதே நேரத்தில், நீதிமன்ற வளாகத்தின் அருகே நடந்தேறிய இந்த கொலை சம்பவத்தின் எதிரொலியாக, வழக்கறிஞர்களும் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டி திடீரென அப்போது போராட்டத்தில் குதிக்கவே பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, நீதிமன்றத்தின் அருகே நடந்த படுகொலை தொடர்பாக இதுவரை ராமகிருஷ்ணன், முத்து கிருஷ்ணன், சிவா, தங்க மகேஷ், மனோராஜ், கண்ணன் மற்றும் மற்றொரு கண்ணன் ஆகிய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

முன்னதாக, இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நெல்லை காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றது.

இதனிடையே, இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இதில், பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், திருநெல்வேலி காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், கொலையாளியை விரட்டிப் பிடித்த சிறப்பு எஸ்ஐ உய்க்காட்டானை பாரட்டிய நீதிபதிகள், அவருக்கு சன்மானம் வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது, பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த மற்ற காவல்துறையினர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தனர் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பணியில் இருக்கும் போலீசார் பணியை விட, தங்களது செல்போனில் தான், மூழ்கி கிடப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல, எதற்காக கொலை சம்பவம் நடைபெற்றது என்பதை விட, சம்பவம் நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளதாகவும், நீதிமன்ற வாயிலில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி கூற வருவர் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் வரை இடைக்கால ஏற்பாடாக, மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான, ஆயுதம் தாங்கிய போலீசாரின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்