இந்திய அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கர்நாடக அமைச்சர் யாரும் பேசவில்லை என, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்தை திருத்துவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.ஷிவக்குமார் கூறியதாக சொல்லி, மாநிலங்களவையில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, அரசியல் சாசனத்தை மாற்றுவது குறித்த பேச்சு ஒவ்வொரு முறையும் பாஜக தரப்பிடமிருந்தே வருவதாக குற்றம்சாட்டினார்.