ஹோட்டலில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்...பேரதிர்ச்சியில் திரையுலகம்

Update: 2024-12-30 16:07 GMT

பிரபல மலையாள நடிகர் திலீப் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகர் திலீப் சங்கர் தான், இப்படி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சடலமாக மீட்பட்டிருக்கிறார்.

இவர், மலையாளத்தில் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வந்தவர். இவர் சில திரைப்படங்களிலும், அம்மா இறைத்தே, பஞ்சாக்னி, சுந்தரி உள்ளிட்ட சீரியல்களிலும், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த சூழலில் தான் திலீப் சங்கர், பஞ்சாக்னி என்ற சீரியலின் படப்பிடிப்புக்காக, எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் வந்துள்ளார். இதற்கிடையே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், திலீப் சங்கர் அங்கு ஒரு ஹோட்டலில் 2 நாட்களாக அறை எடுத்து தங்கி இருந்ததாக தெரியவருகிறது.

ஹோட்டல் அறையில் தங்கிய 2 நாட்களாக, படப்பிடிப்புக் குழு அவரை தொடர்பு கொண்டும், எந்த பதிலும் கிடைக்க வில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல, 2 நாட்களாக இவர் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்த நிலையில், துர்நாற்றம் வர தொடங்கியுள்ளது.

இதனால், பயந்துபோன ஹோட்டல் நிர்வாகம், அறைக்குள் சென்று பார்க்க முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள், கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர். அங்கு திலீப் சங்கர் சடலமாகக் கிடப்பதைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நடிகர் திலீப் சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திலீப் சங்கர் அறைக்கு யாரெல்லாம் வந்து போனார்கள், அவரது செல்போனுக்கு இறுதியாக வந்து போன் கால்கள் மூலம் பேசியவர்களின் விபரம், சம்பந்தபட்ட ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் திலீப் சங்கர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இது கொலையா? அப்படி இருப்பின், இதன் பின்னணி என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலையாள நடிகர் திலீப் சங்கரின் உயிரிழப்பு, மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்