``நகை அடமானம் வைத்துள்ள குடும்பங்கள் தாலியே பறிபோகும் நிலை.. ஷாக் புள்ளிவிவரம்’’ - ஜெய்ராம் ரமேஷ்
வங்கிகளில் தாலியை வைத்து கடன் பெற்றுள்ள பெண்கள், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை தொடர்வதால் அவர்களின் தாலிக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்திய குடும்பங்கள் 3 லட்சம் கோடி அளவிலான தங்க நகை கடன் பெற்றுள்ள நிலையில், மந்தமான பொருளாதாரம் காரணமாக அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் குடும்பங்கள் உள்ளதாக புள்ளி விவரம் ஒன்று வெளியாகியிருப்பதை ஜெய்ராம் ரமேஷ் சுட்டிகாட்டியுள்ளார். வங்கிகளில் உள்ள வாராக்கடன்களில் தங்க நகைக்கடன் பங்கு மட்டுமே 30 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில், பெண்களின் தாலி உட்பட பல நகைகள் பறிபோவதாகவும், அரசின் ஒழுங்கற்ற கொள்கை உருவாக்கமும், தவறானவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதுமே இதற்கு முக்கிய காரணம் என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் நகை கடன் அதிகரித்து பெண்களின் தாலி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் தாலிக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.