பீகார் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் டிசம்பர் 13 அன்று நடைபெற்ற முதல் நிலை தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தேர்வர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று பாட்னாவில் போராட்டம் நடத்திய தேர்வர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து தண்ணீரை பீச்சி அடித்தும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, பீகாரில் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் ஊழல் ஆகியவற்றை தடுக்க வேண்டியது அரசின் பணி என தெரிவித்துள்ளார். இந்த கடும் குளிரில் இளைஞர்களின் மீது தடியடி மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது என்பது மனிததன்ன்மையற்ற செயல் எனவும், பாஜகவில் இரட்டை எஞ்சின் அரசு இளைஞர்களின் மீதான இரட்டை அராஜகத்தின் அடையாளமாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார்.