இறக்கமே காட்டாமல் அடிக்கும் தக்காளி.. மொத்தமாக குட்பை சொன்ன இல்லத்தரசிகள் - மாற்று வழி என்ன?

Update: 2023-07-13 05:35 GMT

கடந்த வாரம் உச்சத்திலிருந்து கடந்த சில தினங்களாக சற்றே குறைந்து தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது... இதற்கிடையே ரேஷன்கடைகளில் விற்கப்படும் தக்காளி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.....இதுகுறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் அதிக வெயில் காரணமாக தக்காளி சாகுபடி குறைவாகவே இருக்கும். இந்த ஆண்டு வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் தக்காளி உற்பத்தி முற்றிலும் முடங்கி விட்டது. தவிர, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் தக்காளி சாகுபடியை விவசாயிகள் கைவிட்டதால் வரத்து கணிசமாக குறைந்தது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 500 முதல் 1,500 டன் தக்காளி பெட்டிகள் வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக தக்காளி கிலோ 100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் தக்காளி விலை 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 110 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 130 முதல் 150 ரூபாய் வரை விற்பனை யானது.

இதேபோல் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கும், அவரைக்காய் 45-ரூபாய்க்கும் ஊட்டி கேரட் 55-ரூபாய்க்கும், பீன்ஸ் 80-ரூபாய்க்கும், பீட்ரூட் 40-ரூபாய்க்கும் , வெண்டைக் காய் 40-ரூபாய்க்கும், கத்திரிக் காய் 40 -ரூபாய்க்கும், பாகற்க்காய் 50-ரூபாய்க்கும், முருங்கைகாய் 40-ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50-ரூபாய்க்கும், பட்டாணி 200-ரூபாய்க்கும், இஞ்சி 260-ரூபாய்க்கும், பூண்டு 200-ரூபாய்க்கும் விற்பனையானது.

விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால், இல்லத்தரசிகள் தக்காளி பக்கம் செல்வதையே தவிர்க்கின்றனர்.

தக்காளி விலையேற்றத்தால் மக்கள் படும் துயரத்தை குறைக்கும் வகையில், அரசு சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக நேற்று தமிழகம் முழுவதும் 300 கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. இதில் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று தக்காளியை வாங்கி சென்றனர்.

இது குறித்து பேசிய நெல்லையை சேர்ந்த நைனா முகமது, ரேசன் கடைகளில் ஒருவருக்கு அரை கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டது. 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கிலோ வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

இதே போல் நெல்லையை சேர்ந்த மரகதம் என்பவர் கூறும்போது, வெளிச்சந்தையில் கிலோ ரூ.130 வரை விற்கப்படும் நிலையில் நியாய விலை கடையில் ரூ.60-க்கு தக்காளி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

தக்காளியை தொடர்ந்து வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட இதர காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால், இதற காய்கறிகளையும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்