மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பரிந்துரை வழங்கியிருக்கும் மத்திய அரசு, தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் குறித்து மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.
நவம்பரில் வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சுரங்கம் அமைவதற்கு எதிராக மேலூர் பகுதி மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். பல்லுயிர் பெருக்க மண்டலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி முழுமையாக அழியும், நீர் சுனைகள் எல்லாம் அழியும் எனவும் எதிர்ப்பு வலுக்க,
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதியளிக்கவில்லை என்றது தமிழக அரசு. டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசு அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டு தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கத்தை நிறுத்துவோம் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அப்படி வந்தால் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன் என ஆவேசமாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலும் சுரங்க உரிமையை ரத்து செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மறுபுறம் சுரங்க அனுமதி விவகாரத்தில், ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு உரிமம் இறுதி செய்வது வரையில் 10 மாதங்கள் தமிழக அரசு செய்தது என்ன..? என எதிர்க்கட்சிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பின. மத்திய அரசை தமிழக அரசு குற்றம் சாட்டிய வேளையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்லுயிர் பாரம்பரிய தலம் இருப்பதை குறிப்பிட்டு ஏலத்திற்கு எதிர்ப்பு வந்திருப்பதாக கூறியிருக்கும் மத்திய அரசு, சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய, அதாவது பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு சுரங்க எல்லையை மறுவரையறை செய்ய சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு பரிந்துரையை வழங்கியுள்ளது.
சுரங்க விவகாரத்தில் தமிழக அரசையும் மத்திய அரசு விமர்சித்துள்ளது. ஏலம் விட நடவடிக்கை தொடங்கிய 2024 பிப்ரவரியில், நாயக்கர்பட்டியில் பல்லுயிர் பாரம்பரிய தலம் இருப்பதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த கனிம தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பரிந்துரைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. 2024 பிப்ரவரி தொடங்கி நவம்பர் வரையில் ஏலம் தொடர்பான பல கூட்டங்களில் கலந்துக் கொண்ட தமிழக அரசு, எதிர்ப்பையோ, கவலையோ தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்றே தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், இப்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியை தவிர்த்து 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு தெளிவாக்கியிருப்பதாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.