விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, விஷச் சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஒரே நாளில் 57 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 57 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம் மற்றும் 428 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டத்தில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 88 பேரை போலீசார் கைது செய்தனர். மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவிட்டார். அதன்படி, கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதுதவிர, மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரும் வாகன சோதனை நடத்தினர். இதில் 88 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம், 517 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.