மரத்தின் இலை விழுந்ததால் கொலை.. குடும்பமே ஓட ஓட வெட்டி கொன்ற கொடூரம் - நிர்கதியான 2 பிள்ளைகள்.. விழுப்புரத்தில் பயங்கரம்

Update: 2023-07-22 04:38 GMT

விழுப்புரம் அருகே, பக்கத்து வீட்டு மரத்திலிருந்து தனது வீட்டில் இலைகள் விழுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கூலித் தொழிலாளியை, குடும்பமே சேர்ந்து ஓட ஓட விரட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

இதற்காகவா கொலை செய்வது? என நெஞ்சை பதறவைத்துள்ளது விழுப்புரத்தில் அரங்கேறியுள்ள சம்பவம்...

விழுப்புரம் மாவட்டம் பா.வில்லியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன்.

கட்டிட தொழிலாளியான இவருக்கு, சங்கரி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

ஹரிகிருஷ்ணனின் பக்கத்து வீட்டில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார்... ஆனந்தராஜின் வீட்டு மனையில், பூவரசன் என்ற மரம் உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் ஹரிகிருஷ்ணனின் வீட்டின் மீதும் நீண்டிருப்பதால், அதிலிருந்து இலைகள் மற்றும் கம்பளிப் பூச்சிகள் அவரது வீட்டில் தொடர்ந்து விழுந்த வண்ணம் இருந்துள்ளன.

இதனால் எரிச்சலடைந்த ஹரிகிருஷ்ணன், தனது வீட்டிற்கு மேல் வளர்ந்திருக்கும் மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டிவிடுமாறு, ஆனந்தராஜிடம் கூறியுள்ளார்.

அதற்கு ஆனந்தராஜ் கோபப்பட்டு, கிளைகளை வெட்ட முடியாது முடிந்ததை பார்த்துக்கொள் எனக் கூற, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆனந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஹரிகிருஷ்ணனை கத்தியால் சரமாரியாக குத்தியது மட்டுமல்லாமல், சில்வர் குடத்தால் தாக்கியதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியது குடும்பத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

"5 பேர் சேர்ந்து என் கணவரை கொலை செய்துவிட்டனர்"

"ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்"

"5 பேரையும் சிறையில் அடைக்க வேண்டும்"

வீட்டை சீரமைக்கப்போறேன் மரத்து வெட்டுங்கன்னுதான் சொன்னாரு, அதற்காக எங்க கண் முன்னாலயே அந்த 5 பேரும் சேர்ந்து கொலை செய்துவிட்டனர் என ஹரிகிருஷ்ணன் சகோதரி, கதறி அழுதபடி கூறியது கண்ணீர் மல்க வைத்தது. ஆனந்தராஜ், அவரது மனைவி விஜயா, மகன்கள் ஈஸ்வர், திருமலை, குணாளன் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

"மரத்த வெட்டுங்கன்னு அண்ணன் சொன்னாரு"

"என் அண்ணன 5 பேரும் சேர்ந்து கொன்னுட்டாங்க"

"ஏழ்மையான குடும்பத்த சேர்ந்தவங்க நாங்க"

"எங்களுக்கு நீதி கிடைக்கணும்"

இதேபோன்ற நிலை தங்களுக்கும் வரலாம் எனவும், எனவே அந்த 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கூட்டாக சேர்ந்து, ஆனந்தராஜ் குடும்பத்திற்கு எதிராக சூளுரைத்தனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தராஜ், காங்கிரஸ் கட்சியில் கண்டமங்கலம் எஸ்எஸ்டி பிரிவு வட்டார தலைவராக பதவி வகித்து வருவது தெரியவந்தது.

மரத்தை வெட்டச் சென்னதால், ஆளையே வெட்டிய சம்பவம், ஒட்டுமொத்த கிராம மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்