ஈரோடு இடைத்தேர்தல்: யார் இந்த சஞ்சய் சம்பத்...?

Update: 2023-01-21 17:30 GMT

Full View 



ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அவர் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கூட்டணியில் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக விட்டுக்கொடுத்துவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது.

மறைந்த எம்.எல்.ஏ.வின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் களத்தில் மக்களை சந்தித்தால், அவர்கள் வெற்றி பெறுவது எளிது என்ற கருத்து நிலவுகிறது. அதன்படி மறைந்த எம்.எல்.ஏ.வின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரது மனைவி வரலட்சுமி இளங்கோவன் மற்றும் இளைய மகன் சஞ்சய் சம்பத், திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகிய 4 பேரில் யாராவது நிற்க வேண்டும் என்று காங்கிரசில் ஒரு தரப்பினர் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

கட்சி தலைவர்கள் கூட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தேர்தலில் போட்டியிட வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன், தான் போட்டியிடவில்லை என தெரிவித்துவிட்டார் . இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக தெரிவித்துவிட்டார்.

தனது இளையமகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பளிக்க தலைமைக்கு கோரிக்கை விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதற்கிடையே இளையமகன் சஞ்சய் சம்பத் களம் இறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. பெரியார் ஈ.வி.ராமசாமியின் கொள்ளுப் பேரனான சஞ்சய் சம்பத், திருமகன் ஈவெராவின் சகோதரர் 42 வயதாகும் அவர் எம்.பி.ஏ. பட்டதாரி. சொந்தமாக தொழில் செய்துவரும் அவர், இளைஞர் காங்கிரசில் உள்ளார்.

2021-ல் திருமகன் ஈவெரா போட்டியிட்ட போது தேர்தல் பொறுப்பாளர் பணியை மேற்கொண்டவர். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர், அரசியல் களத்தை அறிந்தவருமான அவரை களமிறக்குவது சரியாக இருக்கும் என காங்கிரஸ் நம்புவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்