திருப்பதி கோயிலில் தில்லாலங்கடி வேலை.. ரூ.100 கோடியை சுருட்டிய முன்னாள் ஊழியர்
ஏழுமலையான் கோவில் காணிக்கை கணக்கிடும் பணியை கண்காணிக்கும் பணியாளராக கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த வெளிநாட்டு பணத்தை திருடி அந்த பணத்தில் 100 கோடி ரூபாய் அளவிற்கு அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோட்டம், நகைகள், என சொத்து குவித்தது அம்பலமானது... இவ்விவகாரத்தில் ரவிக்குமாரை தப்ப வைக்க வேறு சிலர் பணம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவங்கள் கடந்த ஆண்டு நடந்த நிலையில், இது தொடர்பாக தேவஸ்தானம் அளித்த புகார் திருப்பதி லோக் ஆயுக்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சமரச உடன்படிக்கை அடிப்படையில், ரவிக்குமாரின் 15 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தேவஸ்தானத்தின் பெயருக்கு நன்கொடையாக வழங்குவது போல் மாற்றப்பட்டது... அதாவது காணிக்கை பணத்தைத் திருடி வாங்கிய சொத்தின் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது போல் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
விஷயம் பூதாகரமான போது அதை வெளியில் கொண்டு வர முயன்றவர்கள் கைது செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.. தொடர்ந்து இவ்விவகாரம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் ஆந்திர பாஜக பிரமுகரும் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவருமான பானு பிரகாஷ் ரெட்டி இதை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி கொண்ட குழுவை அமைத்து ரவிக்குமார் வாங்கி குவித்த மற்ற சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்...
நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஆந்திர போலீசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.