ஒரே குடும்பத்தில் 7 பேர்.. காருடன் சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கி சோகம் - துடிதுடித்து பலியான 23 வயது இளம்பெண்

Update: 2023-05-22 03:09 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வெப்பச்சலனம் காரணமாக பிற்பகலில் பல்வேறு இடங்களில் திடீரென சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த‌து. இதனால், ஆர்.டி.நகர், மல்லேஸ்வரம், குமர கிருபா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் விழுந்த‌தோடு, வித்யாரன்யபுரா பகுதியில் பழைய அடுக்குமாடி வீடு ஒன்றும் இடிந்து விழுந்த‌து. அதே நேரத்தில் சுரங்கப்பாதைகள் உட்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், ஆபத்தை உணராமல் பேருந்துகள், கார்கள் சென்றன.

அவர்களைப் போன்றே... எதுவும் நடக்காது, கடந்து சென்றுவிடலாம் என்று விஜயவாடாவில் இருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர், கே.ஆர்.சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றனர். தண்ணீரில் சென்ற போது திடீரென கார் நின்று போனதால், காரை எடுக்க டிரைவர் முயற்சித்துள்ளார். ஆனால், மழைநீர் பெருக்கெடுத்து சுரங்கப்பாதையில் நுழைந்த‌தால் எதிர்பாராத விதமாக கார் நீரில் மூழ்கியது. இதை பார்த்த பொதுமக்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் விரைந்து வந்து ஏணியை சுரங்கப்பாதையில் இறக்கி, மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.

காரில் இருந்த டிரைவர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். அப்போது, அவர்களில் பானுரேகா என்ற 23 வயது பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனே ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே பானுரேகா உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த‌தும் முதலமைச்சர் சித்தராமையா மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். பானுரேகாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும், மற்றவர்களுக்கு அனைத்து சிகிச்சை செலவையும் அரசு ஏற்கும் என்றும் அவர் அறிவித்தார்.

பானு ரேகாவின் குடும்பத்தினர் சுற்றிப் பார்ப்பதற்காக கார் எடுத்துக்கொண்டு வந்த‌தாக தெரிவித்த சித்தராமையா, சுரங்கப்பாதை முன்று தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த போதும், சூறைக்காற்று வீசியதால் சுரங்கப்பாதையில் சென்றதாக கூறினார். சுரங்கப்பாதையில் கார் சென்றதும், கண்ணாடி உடைந்து தண்ணீர் உள்ளே புகுந்த‌தால், கதவுகள் திறக்கமுடியாமல் பழுதானதாகவும், தண்ணீரை அதிகளவில் பானு ரேகா குடித்த‌தால் உயிரிழந்தாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வடிகால் வசதியை மேம்படுத்தி, இதுபோன்ற நிகழ்வு நடக்காதவாறு முன்னுரிமை கொடுத்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் சித்தராமையா கூறினார். மழை பெய்யும் நேரங்களில் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கும்போது, வாகன ஓட்டிகள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையாக அந்த பாதையை தவிர்த்தால் மட்டுமே இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்....

Tags:    

மேலும் செய்திகள்