திருச்சி, திருவெறும்பூர் அருகே கீழே கணபதி நகரை சேர்ந்தவர் பாட்டில் மணி என்ற தினேஷ்குமார். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 23 வழக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், தன்னை போலி வழக்குகள் மூலம் தமிழக போலீசார் என்கவுன்ட்டர் செய்ய இருப்பதாக கூறி குடியரசு தலைவருக்கு தினேஷ்குமார் கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமை ஆணையம் என 16 துறை அதிகாரிகளுக்கு தினேஷ் குமார் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தன் தவறை உணர்ந்து திருந்தி வாழ விரும்புவதாகவும், வழக்கில் ஆஜராக நீதிமன்றம் வரும் போது, தன்னை போலீசார் பிடித்து மேலும் வழக்குகள் பதிவு செய்வதால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், நான் ரவுடி ஆனதில் போலீசாருக்கும் பங்கிருப்பதாக கூறி பரபரப்பு குற்றச்சாட்டை தினேஷ்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரவி வருகிறது.