சென்னைக்குள் ஊடுருவிய `பிளாக் ராக்' கும்பல்.. மக்களே சிக்கி விடாதீர்கள்.. இவர்களிடம் மிக மிக கவனம்
சென்னையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, 14 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மனுதாரரை கடந்த ஏப்ரல் மாதம் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்ட சைபர் கிரைம் கும்பலைச் சேர்ந்த நபர், பிளாக் ராக் என்னும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், 2 மாதங்களில் 500 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதற்காக, தனிச் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து, அதில் பலரும் அதிக லாபம் பெற்றதுபோல போலியான செய்திகளை பரிமாற்றம் செய்து நம்ப வைத்துள்ளார். அதனை நம்பிய மனுதாரர், அந்த செயலி மூலமாக பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 14 கோடியை முதலீடு செய்துள்ளார். இரண்டு மாதங்கள் கழித்து, முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து, 13 வங்கி கணக்குகளை உடனடியாக முடக்கம் செய்த தனிப்படை போலீசார், செங்கல்பட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த மதன், சரவணபிரியன், சதீஷ்சிங், ஷாபகத் மற்றும் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட வடமாநில கும்பலை கைது செய்யவும், மோசடி செய்யபட்ட பணத்தை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.