திருப்பதி லட்டு டெஸ்ட் ரிப்போர்டில் அதிர்ச்சி உண்மை - "பல கோடி பக்தர்கள் உணர்வுகளில் விளையாடுவதா?"

Update: 2024-09-21 06:58 GMT

திருப்பதி லட்டு டெஸ்ட் ரிப்போர்டில் அதிர்ச்சி உண்மை - "பல கோடி பக்தர்கள் உணர்வுகளில் விளையாடுவதா?" - கொதிக்கும் ஜெகன்

திருப்பதி லட்டில் மாமிசக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தானமும், சந்திரபாபு நாயுடு தன் கற்பனைகளுக்கு இறக்கை கட்டி பறக்கவிடுகிறார் என ஜெகன்மோகன் ரெட்டி கொந்தளித்திருக்கிறார்..

திருப்பதி லட்டை மையம் கொண்டு ஆந்திர அரசியல் களம் தகித்து வருகிறது...

திருப்பதி லட்டுவில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக கூறி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைக்க, இதனை உறுதி செய்யும் வகையில் லட்டை ஆய்வுக்கு அனுப்பி அதன் அறிக்கையை தெலுங்குதேசம் கட்சி வெளியிட... ஆட்டம் கண்டது ஆந்திரா...

இந்நிலையில்தான், இந்த சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்திருக்கிறார் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ்..

திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாமிசக் கொழுப்பும், தாவர எண்ணெய்யும் கலந்திருப்பது தெரியவந்திருப்பதாக கூறிய அவர், முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறியது உண்மைதான் என போட்டு உடைத்திருக்கிறார்...

சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கூறி ஷியாமளா ராவ், சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்ககூடாது எனவும் தெரிவித்திருக்கிறார்..

கூடவே, ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடம் இருந்து கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் வாங்கப்பட்ட நெய்யில் தயாரான லட்டின் தரம் மோசமாக இருந்ததாகவும் குற்றம் சுமத்தி இருக்கிறார்..

குஜராத்தில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்காக நெய்யை அனுப்பிய போது இது தெரியவந்ததாக கூறிய அவர், உடனே நெய்யை விநியோகம் செய்த ஊழியர்களை அழைத்து எச்சரித்ததாகவும் கூறியிருக்கிறார்..

தொடர்ந்து, ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், திருப்பதி கோயில் வளாகத்திலே பரிசோதனை கூடம் அமைக்க பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்தார்...

இந்த பரபரப்புக்கிடையே, மறுபக்கம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

திருப்பதி லட்டுவில் மாமிசக் கொழுப்பு கலக்கப்பட்டதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக கூறிய ஜெகன், ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதை திசை திருப்பவே இந்த அவதூறு பரப்பப்படுவதாக கூறியிருக்கிறார்..

லட்டு விவகாரத்தில் உண்மைத் தன்மை இல்லை எனவும், கடவுளின் பெயரால் சந்திரபாபு நாயுடு அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சுமத்திய ஜெகன், கோயிலுக்கு வழங்கப்படும் நெய் உரிய பரிசோதனைக்கு பின்னரே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது முறையல்ல எனவும், கட்டுக்கதைகளுக்கு எல்லாம் இறக்கை கட்டி விளையாடுகிறார் சந்திரபாபபு நாயுடு என கொந்தளித்திருக்கிறார்..

லட்டு அரசியல் ஆந்திராவையே அதிர வைத்திருக்கும் நிலையில் நடந்ததும், இனி நடப்பதும் என்ன என்பது ஏழுமலையானுக்கு தான் வெளிச்சம்...

Tags:    

மேலும் செய்திகள்